கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனின் மனைவிகள் சந்திப்பு... என்ன விவரம்?
எங்களுடைய வலியை நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று சுனிதா கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பின்னர் கல்பனா சோரன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டின் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய மனைவிகளான முறையே சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கல்பனா சோரன் இருவரும் டெல்லியில் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனமடைய செய்ய விசாரணை முகமைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சிகள் கூறி வரும் சூழலில், இந்த சந்திப்பானது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி கல்பனா சோரன் கூறும்போது, ஹேமந்த் சோரனின் கணவர் கைதுக்கு பின்னர், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஒட்டுமொத்த ஜார்க்கண்டும் சுனிதாவுடன் உள்ளது. ஒவ்வொருவருடைய வலியையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த போராட்டங்களை நாங்கள் ஒன்றாக இணைந்து முன்னெடுத்து செல்வது என முடிவெடுத்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.
அமலாக்க துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதும், முதல்-மந்திரியாக சம்பை சோரன் பதவியேற்று கொண்டார். கெஜ்ரிவால் கைது சம்பவத்திற்கு பின்னர், அவருடைய மனைவி முதல்-மந்திரியாக கூடும் என கூறப்படுகிறது. இதற்காக அவர் தயாராகி வருகிறார் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி சமீபத்தில் கூறினார்.