கங்கனா சர்ச்சையில் ஆரம்பமே அதிரடியா...? காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரியா மாற்றம்
உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதியில் போட்டியிட சுப்ரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக, வீரேந்திர சவுத்ரியை அக்கட்சி அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் இமாசல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்து ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு பதிலளித்த கங்கனா, நான் அனைத்து வகையான பெண் வேடங்களிலும் நடித்துள்ளேன். ராணியாகவும் நடித்திருக்கிறேன். தலைவியாகவும் நடித்திருக்கிறேன் என்று அவர் ஏற்று நடித்த பல்வேறு வேடங்களையும் பட்டியலிட்டார். எனினும், சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய சுப்ரியா, அது குறித்து விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார். அதுபற்றி அவர் கூறும்போது, எனது சமூக வலைதள கணக்குகளை பலரும் பயன்படுத்துகின்றனர்.
அதில் யாரோ மர்ம நபர்தான் மிகவும் தரக்குறைவான இந்த பதிவை போட்டுள்ளார். அது குறித்து அறிந்தவுடனே அதனை நான் நீக்கிவிட்டேன் என கூறினார். எந்த ஒரு பெண்ணுக்கு எதிராகவும், நான் தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்கமாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார். இந்த பதிவை போட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் சுப்ரியா தெரிவித்து இருந்தார்.
எனினும், இந்த சர்ச்சை தேர்தலில் எதிரொலிக்க கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அது வெற்றியை பறிக்க கூடிய அளவுக்கு இருக்கும் சூழலும் உள்ளது. இந்நிலையில், சுப்ரியாவுக்கு பதில் வீரேந்திராவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்து உள்ளது.
கடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுப்ரியா, பா.ஜ.க.வின் பங்கஜ் சவுத்ரியிடம் தோல்வியை தழுவினார். இந்த நிலையில், இந்த முறை இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு சுப்ரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக, வீரேந்திர சவுத்ரியை அக்கட்சி அறிவித்து உள்ளது.
இதுபற்றி சுப்ரியா கூறும்போது, சமூக ஊடக தலைவராக தன்னுடைய வேலையை தொடர்வதிலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால், தன்னை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று கட்சியிடம் கேட்டு கொண்டேன். தனக்கு பதிலாக, வேறு வேட்பாளரை அறிவிக்கும்படியும் கூறினேன் என்று தெரிவித்து உள்ளார். சுப்ரியாவின் சர்ச்சை பதிவை அடுத்து, அவருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.