10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; பா.ஜ.க. இளம் வேட்பாளர் பேட்டி
வதோதரா மக்களவை தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என குஜராத் பா.ஜ.க. தலைவர் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார் என ஹேமங் கூறியுள்ளார்.
வதோதரா,
குஜராத்தின் வதோதரா மக்களவை தொகுதிக்கான எம்.பி.யாக ரஞ்சன் பட் பதவி வகித்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் இருந்து அவர் விலகி கொண்டார். இதனால், யார் இந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், இந்த தொகுதிக்கான வேட்பாளராக ஹேமங் ஜோஷி (வயது 33) என்பவரை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. குஜராத்தின் பா.ஜ.க.வுக்கான மிக இளம் வேட்பாளர் என்ற பெருமையை ஹேமங் பெற்றுள்ளார்.
கலாசார பாரம்பரிய செறிவு மற்றும் தொழில் வளர்ச்சி கொண்ட குஜராத்தில் உள்ள வதோதரா மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி முன்பு போட்டியிட்ட அனுபவம் வாய்ந்தவர். அதன்பின்பு வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
இந்நிலையில், ஹேமங் செய்தியாளர்களிடம் பேசும்போது, குஜராத்தின் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் எனக்கு இலக்கு ஒன்றை நிர்ணயித்து இருக்கிறார்.
இதன்படி, பிற தொகுதிகளுக்கு வெற்றி வித்தியாசம் 5 லட்சம் வாக்குகள் என நிர்ணயித்தபோதும், வதோதரா மக்களவை தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறார். அதற்காக நான் கடுமையான முயற்சியை மேற்கொள்வேன்.
இந்த தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நான் கனவுகூட காணவில்லை. ஆச்சரியம் தரும் வகையில் இந்த விசயம் வந்து சேர்ந்தது.
நானும், என்னுடைய மனைவியும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது எனக்கு வாழ்த்து கூறி தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்து விட்டன. இதன்பின்னரே, இந்த தொகுதிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்ற விசயம் தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.