கோவையில் அண்ணாமலை படத்துடன் பிரம்மாண்ட பலூன்கள்? - மாவட்ட கலெக்டர் விளக்கம்
அண்ணாமலையின் படத்துடன் பிரம்மாண்ட ஹீலியம் பலூன்கள் பறப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தற்போது அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் படத்துடன், பிரம்மாண்ட ஹீலியம் பலூன்கள் பறப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டருக்கு இந்த புகைப்படங்களை பகிர்ந்து, இதற்கான செலவினத்தை வேட்பாளரின் கணக்கில் கொண்டு வர வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட படங்கள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது எனவும், இதுபோன்ற பலூன்கள் கோவையில் பறக்கவிடப்படவில்லை என்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் 'எக்ஸ்' தளத்தில் விளக்கமளித்துள்ளார்.