தேர்தல் கருத்துக்கணிப்புகள்: '2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டவை' - மம்தா பானர்ஜி


தேர்தல் கருத்துக்கணிப்புகள்: 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டவை - மம்தா பானர்ஜி
x

கோப்புப்படம்

இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா,

7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அன்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

இதில் பா.ஜனதா ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் சரியாக இருக்கவில்லை.

இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை. தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜனதா முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிக்கிறார்கள் என்று தவறான தகவலைப் பரப்பியது போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜனதாவின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.


Next Story