பா.ஜ.க.வுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கினார் ஈஸ்வரப்பா
பா.ஜ.க.வுக்கு எதிராக ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
பா.ஜ.க.வில் சீட் வழங்காததால் கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுவதற்காக ஈஸ்வரப்பா கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர்களுக்கு சீட் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவையும், ஹாவேரியில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது.
இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து அமித்ஷா அவரிடம் பேசி, முடிவை கைவிடுமாறு கோரினார். அதற்கு ஈஸ்வரப்பா, ''கர்நாடக பா.ஜ.க. எடியூரப்பா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது இளையமகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார். இதனை அமித்ஷா ஏற்க மறுத்தார்.
இதையடுத்து ஈஸ்வரப்பா நேற்று ஷிமோகாவில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது," இந்த தொகுதியில் பா.ஜ.க., காங்கிரசை தோற்கடிப்பேன். எடியூரப்பா குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க.வை விடுவிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்". இவ்வாறு அவர் கூறினார்.