இந்திய தேர்தலில் இடையூறு...!! சீனாவின் அதிரடி திட்டம் என்ன...? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை


இந்திய தேர்தலில் இடையூறு...!! சீனாவின் அதிரடி திட்டம் என்ன...? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 April 2024 5:30 PM IST (Updated: 6 April 2024 6:40 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்த விசயங்கள் தெரிய வந்துள்ளன.

நியூயார்க்,

டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கடந்த மாதத்தில் சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவை சமூக நலன்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புது கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. உலகம் முழுவதும் இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் கூட்டாக 49 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்த விசயங்கள் தெரிய வந்துள்ளன.

இதுபற்றி மைக்ரோசாப்டின் அச்சுறுத்தலை கண்டறிவதற்கான நுண்ணறிவு குழு கூறும் தகவலின்படி, சீனாவின் சைபர் குழுக்கள், வடகொரியா தொடர்புடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் பல்வேறு தேர்தல்களை இலக்காக கொண்டு செயல்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலின்போது, சீனா, தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில், தங்களுடைய விருப்பங்களுக்கு பலன் கிடைக்கும் வகையில், பொது மக்களின் கருத்துகளை மெல்ல சமூக ஊடகம் வழியே பரப்பி விடுவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்திகளை அள்ளி குவிக்க கூடும் என்று தெரிகிறது என்று மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவால், வேட்பாளர்களின் அறிக்கைகள், பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நிலைப்பாடுகள் என பல விசயங்களை மக்களிடையே தவறாக வழிநடத்தும் வகையில் கொண்டு சேர்க்கும் தந்திரங்களை இலக்காக கொண்டு திட்டமிட்ட தாக்கம் ஏற்படுத்தப்படும்.

இந்த செய்திகள் ஆய்வு செய்யப்படாமல், அனுமதிக்கப்பட்டால் வாக்காளர்கள் சரியான முடிவு எடுக்காமல் போவதற்கான சாத்தியம் உள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவின் உடனடி தாக்கம் மிக குறைவாக உள்ளபோதும், இதுபற்றிய சீனாவின் பரிசோதனை முயற்சி தொடர்ந்து அதிகரித்து வருவது வருங்காலங்களில் திறம்பட பாதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில், அது சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் நாட்டு தேர்தலில் இதுபோன்ற தன்னுடைய செல்வாக்கை செலுத்த, இதற்கு முன் சீனா முயற்சித்த விசயங்களையும் குறிப்பிட்டு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக சீனாவின் ஆதரவு பெற்ற ஸ்டோம் 1376 என்ற குழுவானது, திறம்பட செயல்பட்டது.

இந்த குழு, போலியான ஆடியோ விளம்பரங்கள், மீம்களை பரப்பியது. தைவானின் அதிபர் வேட்பாளரான வில்லியம் லாய் மற்றும் பிற தைவான் அதிகாரிகளை பற்றிய மீம்கள் பரப்பப்பட்டன. இதேபோன்று செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட, தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்களின் பயன்பாடும் 2023-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அதிகரித்து உள்ளது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிலும் தேர்தலின்போது, பிரசாரத்தில் தாக்கம் ஏற்படுத்த இந்த சீன குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. கென்டகியில் ரெயில் தடம் புரண்டது, மாவுய் காட்டுத்தீ, ஜப்பானிய அணுக்கழிவு நீர் வெளியேற்றம், அமெரிக்காவில் போதை பொருள் பயன்பாடு, குடியுரிமை கொள்கைகள் மற்றும் இனவெறி பதற்றங்கள் உள்ளிட்ட பல விசயங்களில் தாக்கம் ஏற்படுத்தவும், பிரிவினைகளை விதைக்கவும் செயற்கை நுண்ணறிவு விசயங்களை சீனா பயன்படுத்த முயற்சிப்பது அதிகரித்து வருகிறது என்றும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

எனினும், இந்தியாவில் முன்னெச்சரிக்கையுடன் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில், பொய்யான மற்றும் தவறான செய்திகளை கண்டறிந்து, அதற்கு சரியான பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதற்கேற்ப, சாட்ஜிபிடியை மேம்படுத்திய ஓபன்ஏ.ஐ.யின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளை கடந்த மாதம் சந்தித்து, வரவிருக்கிற தேர்தலில் செயற்கை நுண்ணறிவு, தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கியிருந்தது கவனிக்கத்தக்கது.


Next Story