பா.ஜனதாவுக்கு கூடுதல்வாக்கா? உண்மைக்கு புறம்பானது - தேர்தல் கமிஷன் பதில்
கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வாக்குகளை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஒரு முறை வாக்குப் பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.விற்கு 2 வாக்குகள் விழுந்ததாகவும், வி.வி.பாட் இயந்திரத்தில் இரண்டு ஒப்புகைச் சீட்டுகள் பிரின்ட் ஆனதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனிடையே வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் கூடுதல் வாக்கு பதிவானதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்துள்ளது. காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் நடைமுறை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் அடிப்படை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் வாக்குச்சீட்டு முறையை கோருவது பிற்போக்குத்தனமானது என்றும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டதால் தேர்தலில் மோசடிக்கு வாய்ப்பில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.