டெல்லி: சொகுசு காரில் பதுக்கிய ரூ.2 கோடி; இரவிலும் தொடர்ந்த பணம் எண்ணும் பணி
டெல்லி போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்ததில், அவர்களிடம் ரூ.2 கோடி பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தல் அடுத்தடுத்து நடக்க உள்ளது. டெல்லியில் வருகிற 25-ந்தேதி 6-வது கட்ட தேர்தலின்போது, 7 மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும். இதனை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த துக்ளாபாத் பகுதியை சேர்ந்த பறக்கும் படையினர், ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, ஆடம்பர ரக பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று வந்தது. அதனை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, 2 பெட்டிகளில் நிறைய பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
காரில் இருந்த 2 பேரை டெல்லி போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால், காரில் இருந்த ரூ.2 கோடியையும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, வருமான வரி துறையினர் மற்றும் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு வந்தடைந்தனர். அவர்களின் பணம் எண்ணும் பணி இரவிலும் தொடர்ந்தது.