பரபரக்கும் தேர்தல் களம்: ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?


பரபரக்கும் தேர்தல் களம்: ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 3 May 2024 5:10 AM IST (Updated: 3 May 2024 5:27 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவை ஆகும். ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேநேரம் அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக.1951-ம் ஆண்டு தேர்தல் முதல் ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார். இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சோனியா நாடாளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். எனவே ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா நாடாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Next Story