டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது தாக்குதல்
வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
டெல்லியில் மே 25-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். இதையடுத்து டெல்லியில் தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக பிரசாரத்தின் போது உடனிருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பிறகு அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி இருப்பதாக கன்னையா குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னுடைய புகழ் அதிகரித்து வருவதால், விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்ததாகவும் கன்னையா குமார் தெரிவித்துள்ளார்.