கோவையில் கூகுள் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - தி.மு.க.புகார்


கோவையில் கூகுள் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம்  விநியோகம் - தி.மு.க.புகார்
x
தினத்தந்தி 18 April 2024 4:51 PM IST (Updated: 18 April 2024 4:53 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதி மீறி கோவையில் கூகுள் பே மூலம் பணம் விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் அலுவலரிடம் தி.மு.க. வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பழனிச்சாமி புகார் அளித்துள்ளார்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி (எ) க. பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,

"கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு கூகுள் பே மூலம் பணம் அனுப்பி வருகிறார்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவையில் பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூகுள் பே மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story