பா.ஜ.க. 400 தொகுதிகளில் வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டப்படும் - அசாம் முதல்-மந்திரி


பா.ஜ.க. 400 தொகுதிகளில் வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டப்படும் - அசாம் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 15 May 2024 11:44 AM GMT (Updated: 15 May 2024 11:51 AM GMT)

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இதையடுத்து இன்னும் மீதமுள்ள 3 கட்டங்களுக்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு டெல்லி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,

"கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இம்முறை பா.ஜ.க. 400 தொகுதிகளில் வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோவிலும், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோவிலும் கட்டப்படும். மேலும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவுடன் அது சேர்க்கப்படும்.

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. இனி அப்படி இருக்காது. விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும்.

இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது"

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story