பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி


பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி
x

பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 3 தொகுதிகளுக்கு 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பலூர்கட் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமார்கஞ்ச் பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது,

என்னையும், அபிஷேக் பானர்ஜியையும் (மம்தாவின் அண்ணன் மகன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்) பா.ஜ.க. குறிவைக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், பா.ஜ.க.வை பார்த்து எங்களுக்கு பயமில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்காள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதியில் இருந்து அனைவரும் எங்களை பாதுகாக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story