பா.ஜ.க. என்றால்... பிரசாரத்தில் 3 கட்சிகளை ஒருசேர தாக்கி பேசிய ராகுல் காந்தி


பா.ஜ.க. என்றால்... பிரசாரத்தில் 3 கட்சிகளை ஒருசேர தாக்கி பேசிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 11 May 2024 4:12 PM IST (Updated: 11 May 2024 4:13 PM IST)
t-max-icont-min-icon

மோடியின் கட்டுப்பாட்டில் அமலாக்க துறை, சி.பி.ஐ. மற்றும் பிற அமைப்புகள் உள்ளது போல் இந்த 3 தலைவர்களும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கடப்பா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதுவரை கடந்த ஏப்ரல் 19-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தொடர்ந்து மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தின் கடப்பா நகரில் தேர்தல் பேரணி ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தினரிடையே பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர பிரதேசம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டது, தன்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கான ஓர் உந்துதலாக இருந்தது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இன்றைய ஆந்திர பிரதேசம் பா.ஜ.க.வின் பி அணியால் ஆட்சி செய்யப்படுகிறது. பா.ஜ.க.வின் (BJP) பி அணி என்றால் என்னவென்றால், பி என்பதற்கு பாபு (தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு) என்றும், ஜே என்பதற்கு ஜெகன் என்றும் மற்றும் பி என்பதற்கு பவன் (ஜனசேனா நிறுவனர் பவன் கல்யாண்) என்றும் அர்த்தம்.

இந்த 3 பேரை இயக்க கூடிய ரிமோட் கன்ட்ரோல் நரேந்திர மோடியிடம் உள்ளது என்று கூறியுள்ளார். மோடியின் கட்டுப்பாட்டில் அமலாக்க துறை, சி.பி.ஐ. மற்றும் பிற அமைப்புகள் உள்ளது போல் இந்த தலைவர்களும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது, ராஜசேகர ரெட்டி, தன்னுடைய தந்தை ராஜீவ் காந்திக்கு சகோதரர் போன்றவர் என கூறியதுடன், இரண்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் நல்லுறவை பேணி வந்தனர் என்றும் கூறியுள்ளார்.


Next Story