ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து 2வது கட்டமாக (ஏப்ரல் 26) கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி வரை இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, தேர்தலில் வீழ்த்த முடியும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. அதன் விளைவாக 28 கட்சிகள் இடம் பெற்ற இந்தியா கூட்டணி உருவானது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், இந்தியா கூட்டணி குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல்காந்தி பிரதமராக இருப்பார்.
இந்தியா கூட்டணி கூறுவது போல், ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் உலகம் இந்தியாவை பார்த்து ஏளனம் செய்யும் மற்றும் நாட்டின் மரியாதை பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என்று கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.