வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல்


வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் -  ராதாகிருஷ்ணன் தகவல்
x

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் பணி புரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை 2-ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா, தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் டி.சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, ராஜேஷ் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் 2-ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. 4-ந்தேதி (இன்று) தேர்தல் பார்வையாளர்கள் முழு நேர பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் பார்வையாளர்கள் ஏற்கனவே 3 பேர் உள்ளனர். மேலும் கூடுதல் பார்வையாளர்கள் சென்னை வந்துள்ளனர்.

வடசென்னை தொகுதிக்கு ராஜேஷ்குமாரும், மத்திய சென்னைக்கு ஜிதேந்திர குகஸ்தேவும், தென் சென்னைக்கு முகமது சபிக் சக்கும் வந்துள்ளனர். வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வாக்கு எண்ணும் பணிகளுக்கு முன்னதான ஆயத்த கட்ட பணிகள் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கிவிடும்.

தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு பணியாற்றும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணும் பணி முதலில் தொடங்கும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றிதான் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்குகளின் முடிவுகள் வரவர சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 357 நுண் பார்வையாளர்கள், 374 மேற்பார்வையாளர்கள், 380 உதவியாளர்கள், 322 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 433 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள், சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 4 சுற்றுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.


Next Story