குஜராத்தில் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகல்
குஜராத்தைச் சேர்ந்த 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
காந்திநகர்,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் குஜராத்தில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 2024 மக்களவை தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.க. உள்ளது.
இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தற்போது எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரஞ்சன் பட், பா.ஜ.க. சார்பில் வதோதரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை வேட்பாளராக நிறுத்தியதற்கு பா.ஜ.க.வில் இருந்தே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு வதோதரா தொகுதியில் ரஞ்சன் பட்டை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்ததை கண்டிக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஞ்சன் பட் இன்று தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதே போல், சர்பகந்தா மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக பிகாஜி தாக்கூர் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பிகாஜி தாக்கூர், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.