ஜான்சி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
லக்னோ,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நேற்றைய தினம் 5-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அக்ஷய் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதன்படி லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சவுல்தா பகுதியில் 277-வது வாக்குச்சாவடியில் 375 வாக்காளர்கள்(198 ஆண்கள், 177 பெண்கள்) மற்றும் பம்ஹோரா நாகல் கிராமத்தில் உள்ள 355-வது வாக்குச்சாவடியில் 441 வாக்காளர்கள்(235 ஆண்கள், 206 பெண்கள்) ஆகிய அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் ஏற்படுத்திய தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் பலனாக ஜான்சி தொகுதியில் 63.57 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அக்ஷய் திரிபாதி தெரிவித்துள்ளார்.