மகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம்
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் நிறைவு நாளில், அதுவும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பாகும்.
செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்று வழிபட வேண்டிய சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைப்பிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைப்பிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புராண கதை
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.
'என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன்' என்று அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். இதனால் சாருமதி பல நன்மைகளைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மகாலட்சுமியே அருளிய வரலட்சுமி விரதம், இந்த ஆண்டு ஆடி மாதத்தின் நிறைவு நாளில் வருகிறது. அதுவும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் (ஆகஸ்ட் 16) வருகிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரதமும் வருவது மற்றொரு தனிச்சிறப்பு.
இந்த நாளில் மகாலட்சுமியின் எந்த வடிவத்தையும் வழிபடலாம். அம்பிகைக்குரிய மந்திரங்களை, போற்றிகளை பாடி, மகாலட்சுமியின் மனம் மகிழும்படி பூஜை செய்து வழிபட, மகாலட்சுமியின் பரிபூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional