திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்தமன பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்களான வேல், வாள், ஈட்டி, கேடயம் ஆகியவை பூஜையில் வைக்கப்பட்டன.
திருவட்டார்,
திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் 1739ம் ஆண்டு குளச்சலில் டச்சு படையுடனான போர் துவங்கப்பட்டது. 1740ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா நேரடியாக போர்க்களத்தில் இறங்கும்முன் திருநெல்வேலியை சேர்ந்த குறுநில மன்னரான பொன்பாண்டிய தேவர் மற்றும் தங்கள் படைகளுடன், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இறைவன் முன் போர் ஆயுதங்களை சமர்ப்பித்து பூஜை செய்தபின் போருக்கு புறப்பட்டு வெற்றி கண்டார் என்பது வரலாறு.
இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக 1956ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் மன்னர் வம்சாவளியினர் முன்னிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்தமன பூஜை நடந்து வந்துள்ளது. பின்னர் திருவட்டார் கோவில் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து இந்த பூஜை நடத்தப்படவில்லை.
67 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் இந்த சம்பிரதாயம் தொடங்கியது. திருவிதாங்கூர் மற்றும் பொன்பாண்டிய தேவரின் வம்சாவளியினர் சார்பில் உதயாஸ்தமன பூஜை நடத்தப்பட்டது. இரண்டாவது ஆண்டாக நேற்று பூஜை நடைபெற்றது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்களான வேல், வாள், ஈட்டி, கேடயம் ஆகியவை பூஜையில் வைக்கப்பட்டன. பூஜையை கோவில் தந்திரி கோகுல் நடத்தினார்.
பின்னர் ஆயுதங்களை 'பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு'வினரிடம் பொன்பாண்டிய தேவர் வாரிசுகள், அனைத்து மறவர் நல கூட்டமைப்பினர் வழங்கினார்கள். இந்த குழுவினருடன், இந்த அமைப்புகளை சேர்ந்த பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டு போர் பயிற்சி முறைகளை நிகழ்த்தி காண்பித்தனர்.