நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தொடங்கியது.. 21-ம் தேதி தேரோட்டம்


Nellaiappar Temple Aani Festival
x
தினத்தந்தி 13 Jun 2024 3:14 PM IST (Updated: 21 Jun 2024 2:55 PM IST)
t-max-icont-min-icon

விழா நாட்களில் தினமும் மாலை கோவில் கலையரங்கத்தில் சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நெல்லை:

திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் 518-வது ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது. நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பன்னா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

விழா நாட்களில் தினமும் மாலை கோவில் கலையரங்கத்தில் சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு, 21-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story