திருப்பதி லட்டு விலை, சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பா..? வைரலாகும் தகவல்.. தேவஸ்தானம் விளக்கம்
சுற்றுலாத் துறை மூலம் வர விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களை அணுகாமல், மாநில சுற்றுலா இணையதளம் மூலம் நேரடியாக தரிசன டிக்கெட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தரிசன டிக்கெட்டுடன் வழங்கப்படும் லட்டு தவிர, கூடுதல் லட்டுகளை கவுண்டர்களில் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதியில் லட்டு பிரசாதத்தின் விலையை 50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்க உள்ளதாகவும், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கட்டணத்தை 300 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக குறைக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது. இதேபோல், சில வாட்ஸ்அப் குரூப்களில் மற்றொரு தகவலும் பரவியது. அதில், சிறப்பு நுழைவு சீட்டுகளை அதிக விலையில் பெறலாம் என சிலரது போன் எண்களுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு தெரியவர, உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
திருமலை ஸ்ரீவாரி லட்டு மற்றும் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கட்டணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளதாக பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ரூ.300 மற்றும் லட்டு பிரசாதத்தின் விலை ரூ.50 என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக (https://ttdevasthanams.ap.gov.in) தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா துறைகளுக்கும் குறிப்பிட்ட டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை மூலம் வர விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களை அணுகாமல், மாநில சுற்றுலா இணையதளம் மூலம் நேரடியாக தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.
சுற்றுலா இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதற்காக, சில புரோக்கர்கள் அப்பாவி மக்களிடம் கூடுதல் தொகையை வசூலிப்பது தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவின் கவனத்திற்கு வந்துள்ளது. அதுபோன்று அப்பாவி பக்தர்களிடம் மோசடி செய்யும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தேவஸ்தானம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.