'இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' - ஈரான்


இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஈரான்
x
தினத்தந்தி 26 Oct 2024 5:49 PM IST (Updated: 26 Oct 2024 5:52 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

தெஹ்ரான்,

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதேசமயம், 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story