அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்...? ஜோ பைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்று வரும் நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்று வரும் நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதார பிரச்சினையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷியா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
டிரம்ப்-பைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக நேருக்கு நேர் விவாதம் செய்வது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன்பு, 2020 தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முன்னணி வேட்பாளர்கள், நாட்டிற்கான தங்களின் செயல்திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையை வாக்காளர்களுக்கு வழங்க உள்ளதால், இந்த விவாதம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த விவாதத்தில் முன்கூட்டியே எழுதிய குறிப்புகளை எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. இருவருக்கும் ஒரு பேனா, நோட், ஒரு பாட்டில் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது. எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பது டாஸ் போட்டு தீர்மானிக்கப்பட்டது. நேரம் முடிந்ததும் மைக் ஆப் ஆகிவிடும். இருவரும் பேசினால் அது பார்வையாளருக்கு கேட்காது.
இந்த விவாதத்தின்போது, டிரம்ப் மட்டுமே எங்கள் பொருளாதாரத்தை மோசமாக மதிப்பிடுபவர் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறுகையில், "வரலாற்றிலே இல்லாத அளவிற்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினோம். கொரோனா காலத்திலும் எந்த பிரச்சினையும் இன்றி சிறப்பான ஆட்சியை நடத்தினோம். சீனா போன்ற நாடுகளை கூடுதலாக பணம் செலவழிக்க வைக்க வேண்டும். எல்லை தாண்டி வரும் மக்களால் அமெரிக்க பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று அவர் கூறினார்.