அமெரிக்கா கைவிரித்த நிலையில்... உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா; 25 பேர் பலி
உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியானார்கள்.
கீவ்,
உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா படையெடுத்தது. இதனை ராணுவ நடவடிக்கை என கூறிய ரஷியா, உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க், கார்கிவ், ஒடிசா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை தாக்கியது. இதில், வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. அவை குண்டுகளின் தாக்குதலால் உருக்குலைந்தன. சில தீக்கிரையாகின.
இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போரானது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர்.
உக்ரைனுக்கு பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்தது. ஆயுதம் மற்றும் நிதியுதவியையும் வழங்கியது. ஆனால், டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. இதன்படி, உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது ரஷியாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதில், டோனெட்ஸ்க் பகுதியில் 6 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இதுதவிர, கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.
பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன. இதுபற்றி ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், தாக்குதலை தொடர்ந்து அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது, மீட்பு குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல்கள், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்து காட்டுகின்றன என தெரிவித்து உள்ளார். அந்த இடங்களில் நடத்தப்பட்ட வேறு சில தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.
கார்கிவ் நகரில் போஹோதுகிவ் பகுதியில் நிறுவனம் ஒன்றின் மீது நடந்த டிரோன் தாக்குதல்களில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கின்றது.