"உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.." - ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி
2014-ம் ஆண்டு மோடி-ஒபாமா இடையே நடந்த சுவாரசிய உரையாடல் ஒன்றை இந்திய தூதர் வெளியிட்டார்.
வாஷிங்டன்,
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான் அமெரிக்காவுக்கான தற்போதைய இந்திய தூதராக உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இடையே நடந்த நட்பு ரீதியிலான சுவாரசிய உரையாடல் ஒன்றை வினய் குவாத்ரா தற்போது வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, ஒபாமாவுடன் சேர்ந்து மார்ட்டின் லூதர் கிங் நினைவிடத்துக்கு சென்றார். ஒபாமாவின் லிமோசின் காரில் இரு தலைவர்களும் நட்பு ரீதியாக உரையாடிக்கொண்டே பேசியவாறே சென்றனர். இந்த உரையாடல் குடும்பத்தை நோக்கி திரும்பியது. பிரதமர் மோடியின் தாய் குறித்து ஒபாமா கேட்டார். அப்போது புன்முறுவலுடன் வெளிப்படையாகவும், எதிர்பாராத வகையிலும் பிரதமர் பதிலளித்தார். அதாவது, 'ஜனாதிபதி ஒபாமா, நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏறக்குறைய உங்களது இந்த காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்' என்று மோடி கூறினார்.
அவரது இந்த பதிலைக்கேட்டு அமெரிக்க ஜனாதிபதி மிகவும் ஆச்சரியமடைந்தார். பிரதமர் மோடியின் இந்த வெளிப்படையான பதில் அவருக்கு மிகவும் பிடித்தது. இந்த உரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் அடிமட்ட நிலையில் இருந்து தங்கள் நாடுகளின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு வினய் குவாத்ரா அதில் தெரிவித்துள்ளார்.