பிரதமர் மோடியுடனான சந்திப்பில் நடந்தது என்ன? சுந்தர் பிச்சை பேட்டி

இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வாய்ப்புகளை பற்றி பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டது என சுந்தர் பிச்சை பேட்டியில் கூறியுள்ளார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். பிரான்ஸ் சென்றடைந்த அவரை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் முறைப்படி வரவேற்றார். அன்றிரவு அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்தும் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். இதேபோன்று, பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரான்ஸ் உடனான வலுவான நட்புறவு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி இருப்பது பற்றி பேசினார்.
இந்த பேச்சின்போது, இந்தியாவின் நிலையான கொள்கைகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீனத்துவம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இதன்படி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை இன்று சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சுந்தர் பிச்சை, பாரீஸ் நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தபோது, அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை இன்று சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வியக்கத்தக்க வாய்ப்புகளை பற்றியும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்காக நாம் நெருங்கி பணியாற்றுவதற்கான வழிகளை பற்றியும் விவாதித்தோம் என பேட்டியில் கூறியுள்ளார்.