'அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்' - வடகொரியா எச்சரிக்கை


அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் - வடகொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2024 2:45 PM IST (Updated: 4 Oct 2024 8:17 PM IST)
t-max-icont-min-icon

அணு ஆயுதங்களை பயன்படுத்த வடகொரியா தயங்காது என அந்நாட்டு அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.

சியோல்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும் பல்வேறு கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ தினத்தின்போது அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் பேசுகையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப்படை தகுந்த பதிலடியை கொடுக்கும் எனவும், வடகொரிய அதிபர் கிம்மின் ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்த நிலையில், வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு தென் கொரிய அதிபரின் பேச்சை கடுமையாக விமர்சித்த அவர், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியை யார் அழிக்கிறார்கள் என்பதை இந்தக் கருத்து காட்டுகிறது என்றார். மேலும் தென் கொரியா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.


Next Story