இடுப்பு தெரிய ஆடை... விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் வீடியோ வெளியிட்டு வேதனை


இடுப்பு தெரிய ஆடை... விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் வீடியோ வெளியிட்டு வேதனை
x
தினத்தந்தி 9 Oct 2024 5:51 AM GMT (Updated: 9 Oct 2024 7:13 AM GMT)

அமெரிக்காவில் ஆடை விவகாரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என இளம்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில், தாரா கெஹிடி மற்றும் தெரசா அராவுஜோ என்ற 2 இளம்பெண்கள் பயணித்து உள்ளனர். தோழிகளான இவர்கள், முதலில் குளிருக்கு இதம் அளிக்கும் வகையில் ஸ்வெட்டர் அணிந்துள்ளனர்.

விமானத்தில் அமர்ந்த பின் அதனை கழற்றி வைத்து விட்டனர். இதனால், உள்ளாடை தெரியும்படியும், வயிறு, இடுப்பு பகுதிகள் தெரியும்படியும் காணப்பட்டனர். இந்நிலையில், விமானத்தில் பணியாற்றிய ஆண் ஊழியர் ஒருவர் அவர்களை நெருங்கி, வேறு ஏதேனும் ஆடைகளை மேலே அணிந்து கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். ஆனால், அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

இதனால் சற்று நேரம் கழித்து விமானத்தில் இருந்து இளம்பெண்கள் 2 பேரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இதுபற்றி தெரசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை வெளியிட்டு நியாயம் கேட்டிருக்கிறார். அதில், என்னுடைய தோழிக்கும், எனக்கும் விமானத்தில் பயங்கர அனுபவம் நேரிட்டது.

ஆண் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்திருந்த ஆடையை பார்த்து, வேறு ஆடையை மேலே அணியும்படி கூறினார். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும், நாங்கள் அணிந்த ஆடையில் எந்த தவறும் இல்லை என்றே கூறினர். எங்கள் ஆடைகளும், ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக இல்லை.

ஆனால், அந்த ஆண் ஊழியர், எந்த காரணமுமின்றி எங்களை வெளியேற்ற விரும்பினார். சக பயணிகள் எங்களை பாதுகாக்க முயன்றனர். ஆனால், விமான கண்காணிப்பாளர் ஒருவர் வந்து, விமானத்தில் இருந்து இறங்கவில்லை எனில், போலீசை கூப்பிட வேண்டியிருக்கும் என மிரட்டலாக கூறினார்.

வேறு விமானத்தில் இடம் வாங்கி தரப்படும் என அவர் கூறினார். ஆனால், விமானத்தில் இருந்து கீழே இறங்கிய பின்னர், விமானம் இல்லை என கூறி விட்டார். கட்டண தொகையையும் திருப்பி தரவில்லை. இதன்பின்னர், ஆயிரம் டாலர் செலவழித்து மற்றொரு விமானத்தில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது என குறிப்பிட்டு உள்ளார்.

விமானத்தில் ஏ.சி. செயல்பாட்டில் திருப்தி இல்லாத சூழலில் ஸ்வெட்டரை கழற்றி விட்டோம். வெளியே போக சொல்லும்போது, ஸ்வெட்டரை அணிந்து கொள்கிறோம் என பல முறை கூறியும் அவர்கள் அதனை கேட்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

ஆண் விமான பணியாளர் எங்களுடைய மேலாடைகளை விரும்பவில்லை என்பதற்காக நாங்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டு இருக்கிறோம். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தி விட்டனர் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் எங்களையே பார்த்தனர் என்றும் வேதனை தெரிவித்து உள்ளார்.

அந்த விமான நிறுவனம், பயணிகள் முறையாக ஆடை அணிய வேண்டும் என கொள்கை குறிப்பில் தெரிவித்து உள்ளது. ஆனால், இளம்பெண்கள் அணிந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எதனையும் குறிப்பிடவில்லை என பலரும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், விமான நிறுவன வலைதளத்தில், விமான பயணி போதிய முறையிலான ஆடையை அணியவில்லை என்றால், அல்லது யாருடைய ஆடை ஆபாச அல்லது இயற்கைக்கு எதிராக இருக்கிறது என்றால், விமானத்தில் இருந்து அந்த பயணி கீழே இறக்கி விடப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என தெரசா தெரிவித்து உள்ளார்.


Next Story