இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்


இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்
x
தினத்தந்தி 16 Jun 2025 12:05 PM IST (Updated: 16 Jun 2025 12:05 PM IST)
t-max-icont-min-icon

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல் அவிவ்,

மத்திய கிழக்கில் எலியும், பூனையுமாக இருக்கும் ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் ராணுவ மோதலில் ஈடுபட்டு உள்ளன. தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்தேதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.

'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் தொடங்கிய இந்த ராணுவ நடவடிக்கை, தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்தது. அதன்படி ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகள், ராணுவ நிலைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் துல்லியமாக தாக்கியது.

இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையொட்டி இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் தாக்குதலுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குததால் தூதரகக் கிளை கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவசரகால நெறிமுறைகளைப் பின்பற்றி ஊழியர்கள் தங்குமிடத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயமில்லை என அமெரிக்கா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story