அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் 7 மாநிலங்களில் முந்துவது யார்?
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் அதிக ஆதரவை பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
இருப்பினும் அடுத்த ஜனாதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மட்டுமே உண்மையான போட்டி நிலவுகிறது. அதாவது, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த மாநிலங்களைச் சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். இதனால் கடைசி கட்ட பிரசாரத்தில், இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தின.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த 7 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அட்லஸ்இன்டெல் கருத்துக் கணிப்பு
அட்லஸ்இன்டெல் போல் சார்பில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 49 சதவீத ஆதரவுடன் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 47.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் 1.8 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதில், அரிசோனா மாநிலத்தில் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அங்கு டிரம்புக்கு 51.9 சதவீதம் பேரும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸ் 45.9 சதவீத ஆதரவும் பெற்றனர். வட கரோலினாவிலும் டிரம்ப் முந்தினார். அவர் 50.4 சதவீத மக்களின் ஆதரவை பெற்றார். கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீத ஆதரவு கிடைத்திருக்கிறது.
ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பு
இதேபோல் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ஒரு சதவீத வித்தியாசத்தில் டிரம்பை முந்தினார். கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் பெற்றனர். அதேசமயம் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு குறைந்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலை பெற்றார். அரிசோனாவில் டிரம்ப் முந்தினார். தேர்தல் நாளில் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நாளில் கடுமையான போட்டி நிலவும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.
7 மாநிலங்களிலும் கிட்டத்தட்ட 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேசமயம், தேர்தல் நாளில் வாக்களிக்கக் கூடியவர்களில் டிரம்புக்கு ஆதரவாக அதிகம் பேர் வாக்களிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே 7 மாநிலங்களிலும் நாளை பதிவாகும் வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும்.
அமெரிக்க தேர்தலில் இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நாள் நவம்பர்-5 என அறிவிக்கப்பட்டாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.