தென் கொரியாவை நெருங்கிய ஜோங்தாரி புயல்.. வெள்ள அபாய எச்சரிக்கை


ஜோங்தாரி புயல் நெருங்கியபோது கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்
x
தினத்தந்தி 20 Aug 2024 12:19 PM GMT (Updated: 21 Aug 2024 7:23 AM GMT)

தெற்கில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான ஜெஜு தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ஜப்பானின் ஒகினாவா தீவு அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல் உருவானது. இந்த புயலுக்கு ஜோங்தாரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வேகமாக நகர்ந்து இன்று தென் கொரியாவை நெருங்கியது.

இதன் காரணமாக தென் கொரியாவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்று வீசுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் நிலப்பகுதியை நெருங்கும்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான ஜெஜு தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தீவில் உள்ள சிறிய கப்பல் கட்டும் தளம், துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைபாதைகளும் மூடப்பட்டன.

ஜோங்தாரி புயல் காரணமாக இன்று அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை ஜெஜு தீவை கடக்கும் ஜோங்தாரி புயல், தென் கொரியாவின் மேற்கு கடற்கரையை இரவோடு இரவாக கடந்து, தலைநகர் சியோலுக்கு அருகே நாளை காலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜேஜு தீவின் சில பகுதிகளில் 4 அங்குல மழை பெய்யும் என்றும், நாட்டின் வேறு சில பகுதிகளில் 1 முதல் 3 அங்குலம் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தென் கொரியாவில் பல வாரங்களாக பகல் நேரங்களில் 90 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த புயல் தெற்கில் இருந்து வெப்பமான ஈரப்பதத்தை கொண்டு வந்து வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.


Next Story