இலங்கை அதிபர் தேர்தல்: 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவு


இலங்கை அதிபர் தேர்தல்: 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவு
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 21 Sept 2024 2:23 PM IST (Updated: 21 Sept 2024 2:30 PM IST)
t-max-icont-min-icon

கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயக கடமை ஆற்றினார்.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்து.

அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.

இதனிடையே காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயக கடமை ஆற்றினார். இதேபோல் கொழும்புவில் உள்ள பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் மதியம் 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொழும்பு நகர பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.கே.எஸ்.கே.கே பண்டாரமாபா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாலை 4 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவோம், மாலை 6 மணிக்கு சாதாரண ஓட்டுகளை எண்ணும் பணியை தொடங்குவோம். அனைத்து தேர்தல் நிர்வாகமும் சரியாக உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லை. 27 சதவீத வாக்காளர்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் வாக்களித்து விட்டனர். எங்களால் முடிவுகளை விரைவில் வெளியிட முடியும் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.


Next Story