இலங்கை அதிபர் தேர்தல்: அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களும் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியே இலங்கையில் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அனுரா குமார திசநாயகே கூறினார்.
அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது என வெளிப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.
இதுபற்றி இலங்கை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி அறிவித்து உள்ளது. அதில், மார்க்சிஸ்டு தலைவரான அனுரா குமார திசநாயகே (வயது 55) வெற்றி பெற்றுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கே தோல்வியடைந்து உள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.
முதல் சுற்றில் 56,34,915 (42.3 சதவீதம்) வாக்குகளுடன் திசநாயகே முன்னிலை பெற்றார். பிரேமதாசா 43,63,035 (32.76 சதவீதம்) வாக்குகளுடன் 2-வது இடம் பெற்றார். இந்நிலையில், 2-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. இதில், திசநாயகே வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதனுடைய வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது.