ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு; ஆவலுடன் காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி பதிவு

துறைமுக நகரான தியான்ஜினில் உலக நாடுகளின் தலைவர்கள் திரளாக வருகை தருகின்றனர்.
பீஜிங்,
பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசியதுடன், ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 1-ந்தேதி) என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் சீனா சென்றடைந்த பிரதமருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று, அவருக்கு சீனாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2018-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் வந்தே பாரதம் என்றும் மோடி மோடி என்றும் கூடியிருந்த சீன வாழ் இந்தியர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அவருடைய வருகையை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரிய நடனம் பயின்று வரும் சீனர்கள் சார்பில் பரதம், கதகளி உள்ளிட்ட நடனங்கள் ஆடப்பட்டன. பாரம்பரிய இசை கருவிகளையும் இசைத்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக நகரான தியான்ஜினில் உலக நாடுகளின் தலைவர்கள் திரளாக வருகை தருகின்றனர்.
சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பின்னர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருக்கிறார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, 25 சதவீத கூடுதல் வரி உள்பட அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள சூழலில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சீனாவின் தியான்ஜின் நகருக்கு வந்து சேர்ந்துள்ளேன். ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் நடைபெற உள்ள விரிவான விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதனுடன், பல்வேறு உலக தலைவர்களையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.






