இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்


இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்
x

கோப்புப்படம்

இம்ரான்கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 'சிபர்' வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஜனவரி 30ம் தேதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, அரசு பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அப்போது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, ராவல்பிண்டி போலீசார் அவரை கைது செய்தனர். இம்ரான் கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் காவல் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரை விடுதலை செய்ய கோரி இம்ரான்கான் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் அவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர் ஆகிய நகரங்களை தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதன்மூலம் தலைநகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story