உக்ரைன் போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
கீவ்,
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். இதேபோன்று நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். அப்போது, ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தன்னுடைய வெற்றி திட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி வலியுறுத்தினார்.
இதன்பின் நிருபர்களிடம் அவர் பேசும்போது, எங்களுடைய உளவு பிரிவினரின் தகவலின் அடிப்படையில், உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். இதற்கு முன்பும் கூட, ரஷியாவின் ராணுவத்திற்கு வடகொரியா படை வீரர்களை அனுப்புகிறது என ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டாக கூறினார். எனினும், இந்த முறையே சரியான எண்ணிக்கையை அவர் குறிப்பிட்டு உள்ளார்.