ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு


பிரிக்ஸ் மாநாட்டின்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மாஸ்கோ,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும். மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். அங்கு ஈரான் அதிபர், சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் உரையாடினர்.


Next Story