பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க், விவேக் ராமசாமி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க், விவேக் ராமசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 13 Feb 2025 10:57 PM IST (Updated: 14 Feb 2025 12:29 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி- எலான் மஸ்க் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த 10-ந்தேதி புறப்பட்டார்.முதலில் பிரான்சுக்கு சென்ற அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் மோடி தலைமை தாங்கினார்.மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். 14-வது இந்தியா-பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வழியனுப்பி வைத்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு அவரை தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்து சென்றனர்.அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் இந்திய- அமெரிக்க கொடிகளை அசைத்தபடி 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்' 'மோடி மோடி' என கோஷமிட்டு உற்சாகத்துடன் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பின்னர் பிரதமர் மோடி, பிளேர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பு இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தொடங்குகிறது. முன்னதாக அமெரிக்காவில் உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதேபோல, தொழிலதிபர் விவஏக் ராமசாமியும் பிரதமர் மோடியை சந்தித்தார்.

எலான் மஸ்க் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:- வாஷிங்டன் டிசி நகரில் எலான் மஸ்க்கை சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது, விண்வெளி, தொழில் நுட்பம், புதுமையான கண்டு பிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்ற இந்தியாவின் சீர்திருத்த முயற்சசி குறித்து நான் பேசினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story