பாகிஸ்தான்: மத்திய மந்திரி ஜெய்சங்கரை கைகுலுக்கி வரவேற்று, இரவு விருந்தளித்த பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்றிரவு சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பின்னர் அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அவரை அந்நாட்டு மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதனை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரி ஜெய்சங்கரை, பிரதமர் ஷெரீப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின்னர், ஷெரீப்பின் இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு வெளிவிவகார துறை மந்திரி இஷாக் தாரையும் சந்தித்து பேசினார்.
பாகிஸ்தானில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கவுன்சிலின் 23-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்நாட்டு தலைவர்களும் பாகிஸ்தான் வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், இஸ்லாமாபாத் நகரம் ஏறக்குறைய ஊரடங்கின் கீழ் உள்ளது.
காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடும் பாகிஸ்தானால், இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 9 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய வெளிவிவகார துறை மந்திரி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.