வடகொரியா 1,500 ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது - தென்கொரிய உளவுத்துறை தகவல்
ரஷியாவுக்கு 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது என தென்கொரியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
சியோல்,
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை பதற்றத்தில் வைத்துள்ளது.
தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன் மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது. இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
இதற்கு கைமாறாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி வருவதாக தென்கொரிய உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இதன்படி, இந்த மாதம் ரஷியாவுக்கு சுமார் 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளதாக தென்கொரிய உளவுத்துறை அமைப்பின் தலைவர் சோ டே-யோங் தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மொத்தம் 10,000 ராணுவ வீரர்களை ரஷியாவிற்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.