உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு


உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம்:  ஜெலன்ஸ்கி அறிவிப்பு
x

உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவராக ஆண்ட்ரி நேட்டோவ் என்பவரை அதிபர் ஜெலன்ஸ்கி நியமனம் செய்து உள்ளார்.

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிராக நடந்த இந்த போரில், அந்நாட்டின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது.

போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

போர் தொடங்கிய பின்பு, உக்ரைனில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவராக ஆண்ட்ரி நேட்டோவ் என்பவரை அதிபர் ஜெலன்ஸ்கி நியமனம் செய்து உள்ளார். உக்ரைனின் அனாடலி பார்ஹைலெவிச் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த பதவியை வகித்து வந்த நிலையில், இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போர் திறனை மேம்படுத்தும் வகையில், ஆயுத படைகளை நாங்கள் திட்டமிட்ட முறையில் உருமாற்றியுள்ளோம் என அதுபற்றி பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார். எனினும், அவர் குழுவில் ஒருவராக தொடர்ந்து நீடிப்பார் என உமரோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஐ.ஜி.யாக பார்ஹைலெவிச் இனி செயல்படுவார். ராணுவத்தின் நிலைப்பாடுகளை ஒட்டுமொத்த அளவில் மேற்பார்வை செய்வதுடன், ராணுவ ஒழுக்கம் வலுப்படும் வகையிலான பணிகளையும் அவர் கவனிப்பார் என்று உமரோவ் கூறியுள்ளார்.

இதேபோன்று, ஆயுத படைகளின் தளபதியாக, அலெக்சாண்டர் சிர்ஸ்கை தொடர்ந்து பதவி வகிப்பார். ரஷியா முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022-ம் ஆண்டு முதல், அதிபர் ஜெலன்ஸ்கி, அரசு மற்றும் ராணுவத்தில் அடிக்கடி அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்து வருகிறார்.


Next Story