லெபனான்: வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு


லெபனான்: வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
x
தினத்தந்தி 19 Sept 2024 5:11 AM IST (Updated: 19 Sept 2024 11:04 AM IST)
t-max-icont-min-icon

லெபனான் நாட்டின் தெற்கு பகுதி, பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் மத்திய பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் வாக்கி டாக்கிகள் வெடித்து பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெய்ரூட்,

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தங்களுடைய இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளியே தெரிய வராது என்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சூழலில், நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் பலர் சிக்கி கொண்டனர். லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தும், 2,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று அடுத்த சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்து உள்ளது. 450 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பலர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தெற்கு லெபனான், பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் மத்திய பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர். இதனால், 60 வீடுகள் மற்றும் கடைகளில் தீ பரவியது. அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் நடந்தது. இந்த சம்பவத்தில் 15 கார்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து கொண்டன.


Next Story