பெண்கள் கடத்தல், பாலியல் அடிமை, கொலை... அமெரிக்காவை அதிர வைத்த சைக்கோ பாதிரியார்
கேரியிடம் சிக்கிய 6 பெண்களில், ஜோசபினா ரிவேரா எப்படியோ தப்பி, வெளிவந்திருக்கிறார். இதன்பின்னரே, மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.
பிலடெல்பியா,
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரின் வடபகுதியில் வசித்து வந்தவர் கேரி ஹீத்னிக். ராணுவத்தில் வேலை செய்த அவருக்கு மனநல பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தன.
எனினும், கவுரவத்துடன் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ராணுவத்தில் பணி செய்த அனுபவத்தில் அவருக்கு அரசு சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்து அவற்றை லட்சக்கணக்கான டாலர்களாக அவர் மாற்றினார்.
ஆடம்பர வீட்டுக்கு ஆசைப்படாத அவர், கேடில்லாக் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களை வாங்கி வைத்து கொண்டார்.
கடவுளின் மந்திரிகளுக்கான ஐக்கிய சர்ச் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை உருவாக்கி, அதன் பாதிரியாராக தன்னை அறிவித்து கொண்டார். வரி கட்டுவதில் இருந்து தப்பிப்பதற்காக இந்த சர்ச்சை அவர் பயன்படுத்தி கொண்டார் என மக்கள் கூறுவதுண்டு.
அவரின் மறுபக்கம் அதிர்ச்சி நிறைந்து காணப்படுகிறது. இதுவரை 6 பெண்களை அவர் பேசி, தன்வசப்படுத்தி, கடத்தி சென்றிருக்கிறார். அதன்பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் திரைப்படத்தில் வரும் திகிலூட்டும் காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளன.
அவர்களை கடத்தி செல்லும் கேரி, பின்னர் வீட்டின் அடித்தளத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்திருக்கிறார். அவர்களின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார். பாலியல் அடிமைகளாக அவர்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்.
நீர் நிறைந்த குழியில் தள்ளியும், பாலியல் துஷ்பிரயோகம் செய்தும் கேரி கொடுமை செய்ததில் சாண்டிரா லிண்ட்சே மற்றும் டட்லி என்ற 2 பெண்கள் உயிரிழந்து விட்டனர். சாண்டிராவை பல நாட்களாக பட்டினி போட்டு, கைகளை கட்டி போட்டிருக்கிறார். சித்ரவதைக்கு பின்னர் அவர் உயிரிழந்து விட்டார்.
இந்த 6 பேரில், ஜோசபினா ரிவேரா என்பவரும் ஒருவர். இவர் கேரியிடம் இருந்து எப்படியோ தப்பி, வெளிவந்திருக்கிறார். இதன்பின்னரே, கேரியிடம் சிக்கிய மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.
நடந்த சம்பவம் பற்றி ரிவேரா வெளியிட்ட செய்தியில், அவருக்கு அதிகம் பணம் தேவையாக இருந்துள்ளது. அப்போது, கேரி அவரை தொடர்பு கொண்டு ஆசை காட்டியிருக்கிறார். பின்னர் தன்னுடைய சொகுசு காரில் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
வீட்டில் நுழையும்போதே சந்தேகத்திற்குரிய சம்பவம் நடந்துள்ளது. உள்ளே நுழைய, வெளியே வர என வீட்டின் பூட்டுக்கு இரண்டு சாவி இருந்துள்ளது. எனினும், மாடிப்படி ஏறி சென்று அவர்கள் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன்பின் ரிவேரோவை தாக்கிய கேரி, அவருடைய கைகளை கட்டி போட்டு விட்டார். அவரை மூச்சு திணறும்படி செய்யும்போது, வாழ்க்கை முடிய போகிறது என ரிவேரா நினைத்திருக்கிறார். கத்தி, கூச்சலிட்டிருக்கிறார். அதில் பலனில்லை.
அவரை வீட்டின் அடித்தளத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அதில், விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. அழுக்கடைந்த தரையில் குழி இருந்துள்ளது. இதனால், அவரை புதைக்க போகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போது, அந்த அடித்தளத்தில் அவரை போன்று வேறு சில பெண்களும் இருந்தனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தனர். சில சமயங்களில் அவர்களை குழியில் தள்ளி, மரப்பலகையால் மூடி விடுவார். உள்ளே என்ன நடக்கும் என தெரியாது.
பல மாதங்களாக ரிவேராவுக்கு அந்த பகுதியே, ஒட்டுமொத்த வீடாக அமைந்தது. வெளியுலகம் தெரியாமல் போனது. பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை என கடந்து போன நிலையில், அவர் தப்பி வெளியேறினார். இதனை தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் கேரி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில், கேரியின் வழக்கறிஞர் சக் பெருடோ கூறும்போது, அந்த பெண்களை கடத்தி, வீட்டின் அடித்தளத்தில் பலாத்காரத்தில் ஈடுபட்ட கேரி, சரியான, புதிய இனம் ஒன்றை உருவாக்குவது என்ற இலக்குடன் செயல்பட்டார் என வாதிட்டார்.
அவர்கள் பாதி கருப்பு, பாதி வெள்ளையாக இருப்பார்கள். வெளியுலகத்தின் தாக்கம் இன்றி அவர்கள் இருப்பார்கள் என கூறினார்.
எனினும், இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி கேரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கேரியின் இந்த குற்றங்கள், பீப்பிள் மேகசின் இன்வெஸ்டிகேட்ஸ் சர்வைவிங் எ சீரியல் கில்லர் என்ற பெயரில் தொடராக வெளிவரவுள்ளது.