சூடான்: தலைநகரை கைப்பற்றிய ராணுவம்


சூடான்: தலைநகரை கைப்பற்றிய ராணுவம்
x
தினத்தந்தி 27 March 2025 12:15 AM (Updated: 27 March 2025 6:29 AM)
t-max-icont-min-icon

சூடானில் தலைநகரை ராணுவம் கைப்பற்றியது.

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் தலைநகர் கார்டூமின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தலைநகரை கைப்பற்ற ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமை ராணுவம் மீட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப்பின் கார்டூம் நகரம் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள விமான நிலையமும் மீட்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில் தலைநகர் கைப்பற்றப்பட்டது ராணுவத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story