வான்வழி தாக்குதலில் லெபனான் வீரர்கள் உயிரிழப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்


வான்வழி தாக்குதலில் லெபனான் வீரர்கள் உயிரிழப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்
x

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். ஹமாஸ் இயக்கத்தினரை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில், காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதையடுத்து, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஆனால், இஸ்ரேல் அரசோ, ஹமாஸ் இயக்கமோ அதை கேட்கவில்லை.

இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் உள்ள பல்வேறு வீடுகள் மீது நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அதில், ஒரு அடுக்குமாடி கட்டிடமும், பக்கத்தில் உள்ள 4 வீடுகளும் தரைமட்டமாகின. 87 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து நடத்திய தாக்குதலின் போது, லெபனான் ராணுவ வீரர்கள் சென்ற டிரக் மீது குண்டு விழுந்துள்ளது. இதில் லெபனான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக, லெபனான் அரசிடம் இஸ்ரேல் மன்னிப்பு கோரியுள்ளது. லெபனான் ராணுவத்திற்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை எனவும் தாக்குதலுக்கு வருந்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


Next Story