ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்.. இஸ்ரேல் தூதர் தகவல்
ஐ.நா. தீர்மானத்தை ஹிஸ்புல்லா கடைப்பிடிக்கவில்லை என்றும், தெற்கு லெபனானில் இருந்து ஹமாஸ் பாணியிலான எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தலாம் என்றும் இஸ்ரேல் கவலை தெரிவித்தது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மறுநாளில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.
தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியதுடன் தரைவழி தாக்குதலும் நடத்தியது. இந்த சண்டையில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நீடிக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெர்சாக் கூறி உள்ளார்.
தூதர் மைக் ஹெர்சாக் இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா ஒப்பந்த விதிகளை மீறினால், நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை வழங்கவேண்டும் என்று இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகளை தெற்கு லெபனானில் இருந்து வெளியேற்றவேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டில் நடந்த போர், ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த தீர்மானத்தை ஹிஸ்புல்லா கடைப்பிடிக்கவில்லை என்றும், தெற்கு லெபனானில் இருந்து ஹமாஸ் பாணியிலான எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இஸ்ரேலும் அந்த தீர்மானத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது.
இந்த சூழ்நிலையில், புதிய ஒப்பந்தத்தில் இஸ்ரேல் முன்வைத்த கோரிக்கையை லெபனான் ஏற்குமா? என்பது தெளிவாக தெரியவில்லை.
எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக கடந்த வாரம் இரு தரப்புக்கும் இடையே அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் மீது நம்பிக்கை வந்துள்ளது.