சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 2 பேர் பலி; 19 பேர் காயம்

சிரியாவில் இஸ்ரேல் விமான படை நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
டெல் அவிவ்,
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. ஆனால், இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் (6 லட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
அதிபராக இருந்த பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர். பல இடங்களை கைப்பற்றி முன்னேறினர். இதனால், இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த அதிபர் பஷார் அல்-ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடினார்.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்படி, சிரியாவின் தெற்கே தேரா மாகாணத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியே தாக்குதல் நடத்தியது. இதில், 2 பேர் பலியானார்கள். 19 பேர் காயம் அடைந்தனர்.
சிரியாவில் ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலில், சிரியாவின் ஆயுத குவியல்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் உள்ள ராணுவ தளங்கள் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளன.
இதுபற்றி சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2 ஏவுகணைகள் தாக்குதலில் ஈடுபட்டன. இதில், பொதுமக்களில் ஒருவர் பலியானார் என தெரிவித்து உள்ளது.
தேரா மாகாணத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் ராணுவ கிடங்குகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இந்த வார தொடக்கத்தில், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் கட்டுப்பாட்டு மையம் மீது இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தியது. அந்த மையத்தில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டு இருந்தது என இஸ்ரேல் தெரிவித்தது.