ஈரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; மற்றொரு முக்கிய தளபதி பலி

ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமினியின் நெருங்கிய ராணுவ ஆலோசகராக ஷாத்மனி செயல்பட்டு வந்துள்ளார்.
டெல் அவிவ்,
ஓராண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடனான போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சி முதல்கட்டத்துடன் நின்று போனது. இந்த சூழலில், காசா மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் சமீபத்தில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா மற்றும் ரெஹோவோத் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஈரானின் ஏவுகணை கிடங்கில் 3-ல் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தது.
இந்த சூழலில், ஈரான் நாட்டின் மத்திய தெஹ்ரானில் நடந்த வான்வெளி தாக்குதலில், மிக மூத்த ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் அலி ஷாத்மனி என்பவரை படுகொலை செய்து விட்டோம் என்று இஸ்ரேல் இன்று தெரிவித்து உள்ளது. கடந்த 13-ந்தேதி நடந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷீத் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக ஷாத்மனி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த ஒரு சில நாட்களில் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகி உள்ளார். இது உளவு பிரிவு தலைமையிலான துல்லிய தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
5 நாட்களில் 2-வது முறையாக, ஈரானின் போர்க்கால தலைமை தளபதியை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்து விட்டது என அதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
ஷாத்மனி, ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமினியின் நெருங்கிய ராணுவ ஆலோசகர் மற்றும் புரட்சி படைகள், ஆயுத படைகள் ஆகியவற்றின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
எனினும், ஷாத்மனி உயிரிழந்த தகவலை ஈரானின் அரசு ஊடகம் உறுதி செய்யவில்லை. ஈரான் அதிகாரிகளும் எந்தவித அறிக்கையையும் இதுபற்றி வெளியிடவில்லை. இந்த சூழலில், ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன.






